காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தி நீதியை வழங்குவதே இலக்கு என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) கிடைத்துள்ள 11,000 முறைப்பாடுகளில், 5,000 முறைப்பாடுகளை இந்த ஆண்டிற்குள்ளும், மீதமுள்ளவற்றை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளும் விசாரித்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களுக்கு வெறும் இழப்பீடு வழங்குவது மட்டும் எமது நோக்கமல்ல. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படையாக அறிவித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
அலுவலகத்தின் பணிகளைத் துரிதப்படுத்த 65 புதிய பணியாளர்கள் இணைக்கப்படவுள்ளதுடன், அதிகாரிகளுக்கான பயிற்சிகளுக்காக 375 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மனித புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் மிகுந்த கவனத்துடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்காகத் தேவையான நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளும் அடிப்படை உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. இதில் சர்வதேச மட்டத்திலான ஒத்துழைப்புகளையும் நாம் பெற்று வருகிறோம்.
யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தொழில்நுட்ப மற்றும் பொதுவான சிக்கல்களைச் சரிசெய்ய அரசாங்கம் தயாராக உள்ளது. எனவே, தமிழ் அரசியல் தலைமைகள் இந்தச் செயற்பாட்டிற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.