தென் சீனக் கடலில் உள்ள தாய்வானுக்குச் சொந்தமான பிரதாஸ் தீவுகளுக்குள் (Pratas Islands) சீனாவின் உளவு விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்து பறந்ததாகத் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.
இன்று அதிகாலை 5.41 மணியளவில் சீனக் கண்காணிப்பு விமானம் பிரதாஸ் தீவுகளின் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளது.குறித்த உளவு விமானம் தாய்வானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் (ADIZ) சுமார் 8 நிமிடங்கள் பறந்துவிட்டு வெளியேறியதாகத் தாய்வான் பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சீனாவின் இந்த நடவடிக்கையை “ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற செயல்” எனத் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைச் சிதைப்பதுடன், சர்வதேச சட்ட விதிமுறைகளை வெளிப்படையாக மீறுவதாகவும் உள்ளது.
சீனாவின் இந்தத் தொடர்ச்சியான அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தவிர்க்க முடியாமல் சர்வதேச அளவில் கண்டிக்கப்படும் எனத் தாய்வான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வானைத் தனது நாட்டின் ஒரு பகுதி எனக் கருதி வரும் சீனா, சமீபகாலமாகத் தாய்வான் எல்லையை ஒட்டிய வான் மற்றும் கடல் பகுதிகளில் தனது இராணுவக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் ஊடுருவல், தென் சீனக் கடல் பகுதியில் மீண்டும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.