இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது தொடர்பாகப் பெரும் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. இது குறித்த இறுதி முடிவை எடுப்பதற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) தலைவர் மோஹ்சின் நக்வி, இன்று மாலை 4:30 மணிக்கு அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்ல மறுத்த பங்களாதேஷ் அணியைத் தொடரிலிருந்து நீக்கிவிட்டு, ஸ்கொட்லாந்து அணியைச் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) சேர்த்துள்ளது.
ICC-யின் இந்தச் செயல் “இரட்டை நிலைப் பாடு” என மோஹ்சின் நக்வி கடுமையாகச் சாடியுள்ளார். அரசின் அனுமதியின்றி பாகிஸ்தான் அணி விளையாடாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 15-ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் பாகிஸ்தான் புறக்கணிக்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்லது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் அணி இந்த உலகக்கிண்ணத் தொடரிலிருந்து முழுமையாக விலகினால், அந்த நாட்டுக்கு எதிராகக் கடுமையான தடைகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும் என ICC எச்சரித்துள்ளது. இதனால் இன்றைய பிரதமர் உடனான சந்திப்பு உலக கிரிக்கெட் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஏற்கனவே தனது 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ள போதிலும், இன்றைய சந்திப்பிற்கு பின்னரே அவர்கள் விமானம் ஏறுவார்களா என்பது உறுதியாகும்.