யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகாலமாகச் செயற்பட்டு வந்த இராணுவ முகாம் நேற்று (23) இரவுடன் முழுமையாக அகற்றப்பட்டு, அங்கிருந்த இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
நேற்றிரவு இந்த முகாமை விட்டு வெளியேறிய இராணுவத்தினர், சங்கானை படை முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை, 513-வது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி, சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமாரிடம் ஏற்கனவே கையளித்திருந்தார்.
இதேவேளை, பண்டத்தரிப்பு பகுதியில் நீண்டகாலமாக நிலைகொண்டிருக்கும் இராணுவ முகாமும் அகற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் படையினர் அராலி பகுதியில் உள்ள முகாமிற்கு மாற்றப்படவுள்ளனர்.
பண்டத்தரிப்பு படை முகாமின் கட்டுமானம் சுமார் 100 அடி நீளத்தைக் கொண்டிருப்பதால், அதனை முழுமையாக அகற்றுவதற்குச் சற்று கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வலி. மேற்கு மற்றும் வலி. வடக்கு பகுதிகளில் சிவிலியன் காணிகளிலும், பொது இடங்களிலும் உள்ள இராணுவ முகாம்களைக் கட்டம் கட்டமாக அகற்றி, காணிகளை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

