அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

25 694f2ec30f150

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட மாணவன் கடந்த 8 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

16 வயதுடைய மாணவன் ஒருவரே இவ்வாறு அதிபரால் தாக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மாணவன் தற்போது ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது குறித்து சூரியவெவ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிபரின் மனைவி தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரதேச சபை உறுப்பினராக இருப்பதால், அரசியல் செல்வாக்கு காரணமாகப் பொலிஸார் தயக்கம் காட்டுவதாகப் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

சூரியவெவ பொலிஸார் நீதியை நிலைநாட்டத் தவறியதால், பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரிவுகளுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் (DIG) முறைப்பாடு செய்துள்ளனர்.

“பிள்ளை தவறு செய்திருந்தால் அதற்குரிய தண்டனை வழங்கப்படலாம், ஆனால் இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் தாக்குவதை ஏற்க முடியாது” என மாணவனின் தாய் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கும் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யவுள்ளதாக மாணவனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Exit mobile version