மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு தனியார் காணியில் இன்று (நவ 7) காவல்துறையின் விசேட அதிரடிப்படையினரால் (STF) விசேட தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சஹ்ரான் சம்பவத்திற்குப் பின்னர் குறித்த தனியார் காணி தகர வேலி அமைத்துப் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அங்குத் திடீரென ஒரு குழி தோண்டப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் காணி உரிமையாளரால் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அந்தக் குழி தொடர்பில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று தீவிரமாகத் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எவ்விதமான தடயங்களும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

