நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.5 ஆக இருந்த வேலையின்மை விகிதம் 2025 ஆம் ஆண்டில் 3.8 ஆகக் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
இதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.7 ஆக இருந்த வேலையின்மை விகிதம் 2025 இல் 3.8 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
கல்வித் தகுதிகளின் அடிப்படையில் க.பொ.த சாதாரண தரத்திற்குக் கீழே உள்ள 103,308 பேரும் க.பொ.த சாதாரண தரத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் 91,405 பேரும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் அடங்குவர்.
மேலும் க.பொ.த உயர்தரத்தில் தேர்ச்சி பெற்ற 128,984 பேரும் , இளங்கலைப் பட்டம் மற்றும் உயர் கல்வித் தகுதிகள் பெற்ற 42,254 பேரும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் அடங்குவதாகப் பிரதமர் தெரிவித்தார்.
இவர்களில், 12,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஏற்கனவே வேலை வழங்கப்பட்டுள்ளது, மீதமுள்ளவர்களுக்கும் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி வேலை வழங்கப்படும்.
இதற்கிடையில், ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான வழக்குகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக இது குறித்து அறிவித்தவுடன் ஆட்சேர்ப்பு தொடங்கும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

