அமெரிக்காவில் நடைபெற்ற 41-ஆவது உலகத் திருமதி அழகி (Mrs. World) போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சபீனா யூசுப் (Sabina Yusuf) மூன்றாம் இடத்தைப் பிடித்து சர்வதேச மட்டத்தில் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று (30) காலை நிறைவடைந்த இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் தாய்லாந்து (Thailand) நாட்டைச் சேர்ந்த போட்டியாளர் மகுடத்தைச் சூடினார்.
போட்டியை நடத்திய நாடான அமெரிக்காவின் (USA) போட்டியாளர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இலங்கையின் சபீனா யூசுப் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த திருமதி அழகிகள் கலந்துகொண்ட இப்போட்டியில், சபீனா யூசுப் தனது திறமை மற்றும் ஆளுமையின் மூலம் இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவாகி இச்சாதனையைப் படைத்துள்ளார்.
உலக அரங்கில் இலங்கையின் அழகையும் கலாசாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி சபீனா யூசுப் ஈட்டியுள்ள இந்த வெற்றிக்கு இணையதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

