இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

images 2 7

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்) 5.8 சதவீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) அறிவித்துள்ளது.

ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ஈட்டப்பட்ட மொத்த ஏற்றுமதி வருமானம் 15,776.36 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 2025 நவம்பர் மாதத்தில் மட்டும் 1,364.52 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.56 சதவீத வளர்ச்சியாகும்.

2025 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி இலக்கில் 86.3 சதவீதத்திற்கும் அதிகமான அடைவு, நவம்பர் மாத முடிவிலேயே எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க இது குறித்துத் தெரிவிக்கையில் பிரதான சர்வதேச சந்தைகள் வழமைக்குத் திரும்பியமை மற்றும் நிலையான உற்பத்தித் திறன் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்.

ஏற்றுமதி அபிவிருத்தி மூலோபாயங்களைத் திறம்படச் செயற்படுத்தியதன் மூலம் உலகளாவிய சந்தையில் இலங்கையின் போட்டித்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாணிக்கக்கல், ஆபரணங்கள் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வருமானமும் இந்த மொத்த வருமானத்தில் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன.

இந்தத் தரவுகள் உலகளாவிய வர்த்தகத்துடன் இலங்கை வலுவாக ஒன்றிணைந்துள்ளதையும், மாறிவரும் சந்தைச் சூழலுக்கு ஏற்ப ஏற்றுமதியாளர்கள் தங்களை இசைவாக்கிக் கொண்டுள்ளதையும் வெளிப்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

Exit mobile version