இலங்கையின் மிகப்பெரிய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி வருமான ஆதாரமான ஆடைத் தொழில்துறை, 2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் பாதீட்டுத் திட்டத்தைப் பாராட்டியுள்ளது. ஏற்றுமதி பலத்தையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சரியான திசையில் எடுக்கப்பட்ட ஒரு படியாக இதைத் தொழில்துறை கருதுகிறது.
எவ்வாறாயினும், அரசாங்கத்தால் பின்பற்றப்படும் கொள்கைகளின் நிலையான அமுலாக்கத்திலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது என்று குறித்த துறையினர் வலியுறுத்துகின்றனர்.
ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி, முதலீட்டு வசதி மற்றும் பெரிய பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இலங்கையின் வெளிநாட்டுக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான தெளிவான போக்கைப் பாதீடு வெளிப்படுத்துகின்றது என ஒருங்கிணைந்த ஆடை சங்கங்களின் பேரவை கூறியுள்ளது.
ஆனால், இந்தக் கொள்கைகள் எவ்வளவு திறம்பட அமுல்படுத்தப்பட்டுப் பேணப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அதன் நீண்டகால தாக்கம் தீர்மானிக்கப்படும் என்று JAAF வலியுறுத்துகிறது.
உலகளாவிய ரீதியில் நிலையற்ற சூழலில் ஏற்றுமதியாளர்கள் செயற்படும் இத்தருணத்தில், இந்தப் பாதீட்டு நடவடிக்கைகள் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் தேவையான வெளிநாட்டு முதலீட்டைக் ஈர்க்கவும் உதவும் என்று ஆடைத் துறையினர் நம்புகிறார்கள்.
JAAF இன் பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ் கருத்துப்படி, “2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம் ஒரு வலுவான ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான நோக்கத்தைக் காட்டினாலும், கொள்கை அமுலாக்கத்தின் ஸ்திரத்தன்மையும் தெளிவுமே இறுதியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் காரணியாகும்.”

