சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

1722752828 dds

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில் வைத்து இந்தியக் கியூ பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டம், வல்வெட்டித்துறை நடராஜன் வீதியைச் சேர்ந்த கண்ணன் (வயது 34) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று அதிகாலை இராமேஸ்வரம் பேருந்து நிலையம் பகுதியில் கியூ பிரிவுப் பொலிஸார் திடீர் சோதனை நடத்தினர். பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் சந்தேகத்திற்கிடமான முறையில் அமர்ந்திருந்த கண்ணனைச் சோதனையிட்டபோது, அவரிடம் இலங்கைப் பணம், இலங்கை கடவுச்சீட்டு மற்றும் அரச அடையாள அட்டை ஆகியவை இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், கண்ணன் கடந்த 6ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் ஃபைபர் படகு ஒன்றில் புறப்பட்டு, இந்தியாவின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யம் கடற்கரையில் வந்து இறங்கி, பின்னர் பேருந்து மூலமாக இராமேஸ்வரம் வந்தது தெரியவந்தது.

மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள தனது மனைவியைப் பார்ப்பதற்காகவே அவர் இந்தியாவுக்குச் சென்றுள்ளதாக விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட கண்ணனை இராமேஸ்வரம் நகரப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கியூ பிரிவுப் பொலிஸார், அவர் மீது கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வழக்குப் பதிவு செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட கண்ணனுக்கு எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டு, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version