இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்படவுள்ளது. இந்த வரி விதிப்பால் வாகனங்களின் விலை பெருமளவு உயரும் என்ற அச்சம் நிலவும் நிலையில், பொதுமக்கள் அவசரப்பட்டு வாகனங்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. புதிய வரியினால் வாகன விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படாது என்று சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே உறுதியளித்துள்ளார்.
ஜப்பானிய சந்தையில் தற்போது வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், உள்ளூர் சந்தையில் அந்த விலைக்குறைப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் எனச் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய வரியின்படி, ஒரு வாகனத்தின் பெறுமதிக்கு ஏற்ப சுமார் 75,000 முதல் 100,000 ரூபாய் வரை மட்டுமே மேலதிகச் செலவு ஏற்படும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானில் ஏற்பட்டுள்ள விலைக்குறைப்பு இந்த வரி அதிகரிப்பைச் சமன் செய்துவிடும் என்பதால், நுகர்வோர் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள முறையில் பல தனிநபர் இறக்குமதியாளர்கள் வரி செலுத்துவதைத் தவிர்க்கும் நிலை காணப்படுகிறது. ஆனால், ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் புதிய முறைப்படி, வாகனங்களைச் சுங்கத்திலிருந்து (Customs) விடுவிக்கும் முன்பே துறைமுகத்தில் வரியைச் செலுத்த வேண்டும். இதன் மூலம் அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பதுடன், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர் இறக்குமதியாளர்கள் என அனைவரும் சமமாக வரி செலுத்துவது உறுதி செய்யப்படும் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

