இலங்கையில் ட்ரோன் இயக்குபவர்களுக்கு இனி லைசென்ஸ் கட்டாயம்! தெற்காசியாவில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் இலங்கை!

vikatan 2019 07 82128271 2d70 4b2d 9e31 2a13e89c0987 IMG 20190726 WA0017 1

இலங்கையில் வணிக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் ட்ரோன்களை (Unmanned Aircraft Systems – UAS) இயக்குபவர்களுக்காகப் பிரத்தியேக உரிம முறையை (Licensing system) அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

இலங்கையின் வரலாற்றில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தமிந்த ரம்புக்வெல்லவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முயற்சி செயல்படுத்தப்படுகிறது.

இதற்காக IS-53 என்ற தரப்படுத்தப்பட்ட ட்ரோன் ஒழுங்குமுறைகளை CAASL ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதுவே புதிய உரிம முறைக்கான அடிப்படையாக அமையும்.

உரிமம் பெற விரும்பும் இயக்குபவர்கள் எழுத்து மூலமான தத்துவார்த்தத் தேர்வு (Theory examination) மற்றும் நடைமுறைத் திறன் மதிப்பீடு (Practical assessment) ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

அத்துடன் மருத்துவப் பரிசோதனை மற்றும் தேவையான பாதுகாப்பு அனுமதிகளையும் (Security clearance) பெற வேண்டும்.

முதல் ட்ரோன் இயக்குபவர் உரிமத்தை வழங்குவதற்கான மதிப்பீட்டு செயல்முறை ஏற்கனவே ரம்புக்வெல்லவினால் முன்னெடுக்கப்பட்டது.

தற்போதைய சட்டங்களின்படி, வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து ட்ரோன்களும் CAASL-இல் பதிவு செய்யப்பட வேண்டும்.

மனிதர்களால் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் ஆகிய இரண்டையும் தேசிய விமானப் போக்குவரத்து அதிகாரசபை என்ற ரீதியில் CAASL கண்காணித்து வருகிறது.

சர்வதேச அளவில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், இலங்கையின் ட்ரோன் துறையில் தொழில்முறை மற்றும் பாதுகாப்பு கலாசாரத்தை வளர்ப்பதே இந்த உரிம முறையின் நோக்கமாகும்.

இதன் மூலம், தெற்காசியாவில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக ட்ரோன் இயக்குபவர்களுக்கு முறையான உரிம முறையை அறிமுகப்படுத்தும் இரண்டாவது நாடாக இலங்கை மாறும் என தெரிவிக்கப்படுகிறது

 

 

Exit mobile version