உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் பொதுமக்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பல அத்தியாவசிய சேவைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழைச் சமர்ப்பிப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டின் வரி வருவாயை முறைப்படுத்துவதற்கும், நிதி வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் புதிய அறிவிப்பின்படி, ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் அல்லது வங்கியில் புதிய சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கை ஆரம்பிக்கும் போது இந்தச் சான்றிதழ் கேட்கப்படும், வீடுகள் அல்லது வர்த்தக கட்டிடங்களுக்கான வரைபடங்களுக்கு (Building Plan) உள்ளூராட்சி அதிகார சபைகளிடம் அனுமதி பெறும் போது TIN கட்டாயமாகும், புதிய மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் வருடாந்த வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை (Revenue License) புதுப்பிக்கும் போது இந்தச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும், காணி அல்லது நிலம் ஒன்றின் உரிமத்தைப் பதிவு செய்யும் போது அல்லது நிலம் தொடர்பான ஆவணங்களை உறுதிப்படுத்தும் போது TIN இலக்கம் அவசியமாகும்
இந்த நடைமுறையானது வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும், நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளும் தமக்கான TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் பயன்பாடு நடைமுறை ரீதியாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் TIN சான்றிதழை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையதளம் வாயிலாகவோ அல்லது அலுவலகங்களுக்குச் சென்றோ பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தத் திருத்த சட்டமூலம் அமுலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் தமது அன்றாடத் தேவைகளில் தாமதங்களைத் தவிர்க்க முன்கூட்டியே TIN சான்றிதழைத் தயாராக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான மேலதிக வழிகாட்டல்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது. டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக இந்தச் சான்றிதழை ஏனைய அரச நிறுவனங்களுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.