அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இலங்கை சமூகப் பாதுகாப்பு சபை (SSS), 2025 ஆம் ஆண்டில் தனது 30 கால வரலாற்றில் மிக உயர்ந்த முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிவித்துள்ளது.
சமூகப் பாதுகாப்பு சபையின் கீழ் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணி கடந்த ஆண்டில் பாரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டில் ரூ. 167.41 மில்லியனாக இருந்த புதிய ஆட்சேர்ப்புகளின் மதிப்பு, 2025 இல் ரூ. 318.68 மில்லியனாக உயர்ந்துள்ளது.இது கடந்த ஆண்டை விட 93 சதவீத அதிரடி வளர்ச்சியாகும்.
சபையின் முகாமைத்துவ நடவடிக்கைகளை நவீனப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் தள ஒருங்கிணைப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஆட்சேர்ப்பு முதல் சலுகைக் கொடுப்பனவுகள் வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படுவதால், 2026 ஆம் ஆண்டு முதல் சபை அதிக செயல்திறனுடன் இயங்கும்.
இதன் மூலம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, “அமைப்புசாரா துறை தொழிலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த டிஜிட்டல் மாற்றம் ஒரு மைல்கல்லாகும். 2026-இல் இருந்து பொதுமக்கள் இன்னும் எளிதாக இந்தச் சேவையைப் பெற முடியும்” எனத் தெரிவித்தார்.