‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக வரும் காலங்களில் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வர்த்தக மற்றும் வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நெல் வகைகள் அறுவடைக்கு சுமார் 4 மாதங்கள் எடுக்கும். தற்போதைய நிலையில், சேதமடைந்த வயல்களில் மீண்டும் பயிரிடுவதற்குத் தேவையான, குறுகிய காலத்தில் விளைச்சல் தரக்கூடிய விதை நெல் வகைகள் கைவசம் இல்லை. இதனால் சந்தையில் இவ்வகை அரிசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவலாம்.
பாதிக்கப்பட்ட நெற்காணிகளில் மீண்டும் பயிர்ச் செய்கை முன்னெடுக்கப்பட்டால், நாடு மற்றும் சிவப்பு அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், நெற்செய்கை மட்டுமன்றி சோளம், நிலக்கடலை மற்றும் பச்சை மிளகாய் போன்ற ஏனைய பயிர்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, சுமார் 10,000 ஹெக்டேயர் சோளப் பயிர்ச் செய்கை, 2,011 ஹெக்டேயர் நிலக்கடலைச் செய்கை மற்றும் 1,188 ஹெக்டேயர் பச்சை மிளகாய் செய்கை நாசமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக, சோளம் போன்ற சில பயிர்களை இப்பருவத்தில் மீண்டும் பயிரிடுவது சாத்தியமற்ற நிலை காணப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் சில உணவுப் பொருட்களின் விநியோகத்தில் சவால்கள் உருவாகலாம் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.