உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற முதியவர்கள் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான, மலிவான மற்றும் வசதியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆசியாவின் முத்து என அழைக்கப்படும் இலங்கை முதலிடத்தைப் பிடித்து உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாகப் பல முதியவர்கள் மாற்று இடங்களைத் தேடி வரும் நிலையில், இலங்கை ஒரு சிறந்த தேர்வாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஒரு தம்பதி மாதம் சுமார் 2,200 அமெரிக்க டொலர் (சுமார் 6.5 லட்சம் ரூபா) செலவில், தங்குமிடம் முதல் பொழுதுபோக்கு வரை அனைத்து வசதிகளுடன் ராஜவாழ்க்கை வாழ முடியும் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. கடற்கரையோர வில்லாக்கள் மாதம் 400 டொலருக்கும் குறைவான வாடகையில் கிடைப்பதும், மின்சாரம் மற்றும் இதர சேவைக் கட்டணங்கள் குறைவாக இருப்பதும் பெரும் சாதகமாகக் கருதப்படுகிறது. உயர்தரமான மூன்று நேர உணவு, இருவருக்கு வெறும் 50 டொலர் செலவில் சாத்தியமாவது சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையின் தனியார் மருத்துவமனைகள், குறிப்பாகக் கொழும்பில் உள்ளவை, நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் நம்பகமான சேவைகளை வழங்குகின்றன. அத்துடன், ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் ‘ஓய்வுக்கால விசா’ (Retirement Visa) பெறுவது மிகவும் எளிதானது மற்றும் செலவு குறைந்தது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘My Dream Home’ போன்ற விசா திட்டங்கள் வெளிநாட்டவர்கள் நீண்டகாலம் இலங்கையில் தங்கியிருக்கப் பெரும் உதவியாக உள்ளன.
இந்தப் பட்டியலில் இலங்கையைத் தொடர்ந்து வியட்நாம், தாய்லாந்து, பாலி (இந்தோனேசியா) மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரைகள், மலைநாட்டின் இதமான காலநிலை மற்றும் அன்பான மக்களின் உபசரிப்பு போன்ற காரணிகள் இலங்கையை ஓய்வுபெற்றவர்களுக்கு ஒரு கனவு தேசமாக மாற்றியுள்ளன. குறைந்த செலவில் உயர்தரமான வாழ்க்கை முறையைத் தேடும் சர்வதேச முதியவர்களுக்கு இலங்கை தற்போது மிகச்சிறந்த புகலிடமாக மாறியுள்ளது.