இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi Yan 6) இன் ஊழியர் ஒருவருக்கு, இலங்கை கடற்படை மனிதாபிமான அடிப்படையில் அவசர மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது. இக்கப்பல் இலங்கைக் கடற்பரப்பிலிருந்து சுமார் 700 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, அதில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கடுமையான சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டதாக விடுக்கப்பட்ட அவசர சமிக்ஞையை (Distress Signal) அடுத்து இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (MRCC) வழிகாட்டலின் கீழ், காலி கடற்படைத் தளத்திலிருந்து விரைந்த கடற்படையினர், நாட்டின் கடல் எல்லைக்கு அருகாமையில் வைத்து நோயாளியைப் பொறுப்பேற்றனர். பின்னர் அவர் காலி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட்ட போதிலும், குறித்த சீனக் கப்பல் இலங்கையின் பிராந்தியக் கடலுக்குள் (Territorial Waters) நுழைவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், இம்முறை இலங்கையில் நங்கூரமிடுவதற்கான எந்தவொரு உத்தியோகபூர்வக் கோரிக்கையையும் சீனா முன்வைக்கவில்லை எனத் தெரியவருகிறது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை (Moratorium) இன்னும் அமுலில் இருப்பதே இதற்குக் காரணமாகும். எவ்வாறாயினும், மனிதாபிமானத் தேவைகளுக்காகவும் எரிபொருள் நிரப்புதல் போன்ற அவசரத் தேவைகளுக்காகவும் மாத்திரம் இக்கப்பல்கள் தரை எல்லைக்கு வெளியே அனுமதிக்கப்படுகின்றன.
இதேவேளை, கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) அங்கீகாரம் பெற்ற ‘டொக்டர் ஃபிரிட்ஜோஃப் நான்சன்’ (Dr Fridtjof Nansen) கப்பலுக்கு மாத்திரம் இலங்கைக் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள விசேட அனுமதி வழங்கப்பட்டது. இது ஒரு சர்வதேச அமைப்பின் கீழ் இயங்குவதால் விதிவிலக்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களின் வருகை தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய புதிய நிலையான நடைமுறைகளை (SOP) இலங்கை அரசாங்கம் தற்போது இறுதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.