மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி இலங்கை மருத்துவ சபை (Sri Lanka Medical Council – SLMC) ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் மருந்துச் சீட்டில் தெளிவு மற்றும் நோயாளியின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானது என்று சபை வலியுறுத்தியுள்ளது.
சில மருத்துவர்களால் வழங்கப்படும் தெளிவற்ற மருந்துச் சீட்டுகள் குறித்து மருந்தாளுநர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.
இத்தகைய தெளிவின்மை காரணமாக சரியான மருந்தைக் கண்டறிவது கடினமாகி, அது நோயாளியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறும் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை மருத்துவ சபை மேலும் எச்சரித்துள்ளது.

