இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையை முற்றவிடாமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என திமுக ஊடகப்பேச்சாளர் இராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மீனவர் பிரச்சினை தொடர்பில் திமுகவின் நிலைப்பாடு என்ன என தமிழ்நாடி கேள்வி எழுப்பியதற்கே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழக மீனவர்களுக்கும் இலங்கையில் குறிப்பாக மன்னார், பருத்தித்துறை, வடக்கு கிழக்கு மாநிலங்களில் வாழும் மீனவர்களுக்கும் பிரச்சினைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.
இது அவசியம் தீர்க்கப்படவேண்டும். இதில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டு, இதில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும், இல்லையென்றால் எதிர்காலத்தில் பல எதிர்வினைகள் வந்துவிடும். நல்லதல்ல.
தமிழக மீனவர்களிடம் பிடித்து வைத்த படகுகளை சிங்கள அரசாங்கம் ஏலம் விடுகின்றது. தமிழக மீனவர்கள் குறித்தான கடுமையான சட்டங்கள் கடந்த காலத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதேபோலவே கச்சத்தீவு, அந்தோணியார் கோவிலுக்கு தமிழக மீனவர்கள் செல்வதற்கும் சிங்கள அரசு விரும்பாத நிலையில், கடைசியில் சம்மதித்தது. இப்படி எல்லாம் சிங்கள அரசின் போக்கு இருக்கின்றது.
மத்திய அரசும், மாநில அரசும் இதை கவனிக்க வேண்டும். இலங்கைப் பிரச்சினையும் ஒருபக்கம் தீராத பிரச்சினையாக இருக்கின்றது.
அதேபோல சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்து, அந்த திட்டத்தை பணிகள் துவங்கி நடந்த பின் நிறுத்தப்பட்டது. அதுவும் நல்லதல்ல.
அது போல கச்சத்தீவு பிரச்சினையிலும், எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. சீனாக்காரர்களும், இங்கே இராமேஸ்வரம் பக்கம் வரை வந்து விட்டார்கள். இப்படி இந்தப் பிரச்சினை ஒரு இடியாப்பச் சிக்கலாக இருக்கிறது.
இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் இடையே உள்ள சிக்கல்கள், வலை போடும், மீன்பிடிக்கும் பிரச்சினைகள் இருப்பதை கவனிக்க வேண்டும் என்று இங்குள்ள தமிழக மீனவர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
இலங்கை மீனவர்களும் கோரிக்கையை எழுப்பியுள்ளார்கள். இது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். இந்தப் போக்கு மேலும் மேலும் சிக்கலை எழுப்பிக் கொண்டு சென்றால், அது சர்வதேச அரசியலில் தமிழகத்திற்கு நல்லதல்ல.
இதை சீனாக்காரர்களும், சிங்கள அரசும் கொண்டாடி, மேலும் சிக்கலை உருவாக்கி விடுவார்கள் என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது என்பதை மத்திய மாநில அரசுகள் உணரவேண்டும்.
இதை குறித்து இலங்கையிலிருந்து சேனாதிராஜா, சிவாஜிலிங்கம் போன்ற பல நண்பர்கள் என்னிடம் பேசினார்கள். தமிழகத்தை சேர்ந்த மீனவர் நண்பர்களும் இதை குறித்தான ஒரு கவலையும் பல மாதங்களாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது இரு தரப்பையும் அமர வைத்து பேச வேண்டிய ஒரு சூழல் என்பதையும் கவனிக்க வேண்டும். இதை தொடக்கத்திலேயே தீர்க்காவிட்டால் மேலும் மேலும் சிக்கல், தலைவலியாகி விடும்.
கச்சத்தீவு போல, சேது சமுத்திரம் போல, இலங்கை தமிழர் பிரச்சினை போல ஆகிவிடக் கூடாது என்பதுதான் என் போன்றவர்களுடைய ஆதங்கம்.என்றார்.
#IndiaNews
Leave a comment