மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் வான்வெளி மூடல் காரணமாக விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகளின் விசா காலத்தை எந்தவிதக் கட்டணமுமின்றி நீடிப்பதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெப்ரவரி 28 முதல் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதன் விளைவாக, நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் வெளிநாட்டவர்கள் சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்வதைத் தவிர்க்கும் நோக்கில் இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தின்படி, பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு 14 நாட்களுக்குக் கட்டணமில்லாத விசா நீடிப்பு வழங்கப்படும். விமானப் பயணங்கள் மீண்டும் வழமைக்குத் திரும்ப தாமதமாகும் பட்சத்தில், மேலும் 14 நாட்களுக்குக் கட்டணமின்றி விசா காலத்தை நீடிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு, அமைச்சரவை முழுமையான ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகள், தங்களின் பயணத் திட்டங்களை மீளவும் ஒழுங்குபடுத்தும் வரை, அவர்களை இலங்கையில் எவ்விதச் சட்டச் சிக்கல்களும் இன்றித் தங்க வைப்பதே அரசாங்கத்தின் இந்த முடிவின் பிரதான நோக்கமாகும். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் தற்போது இலங்கையில் தங்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான அவசர கால உதவிகளை வழங்கத் சுற்றுலாத்துறை மற்றும் குடிவரவுத் திணைக்களம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட பயணிகள் இது குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும், விசா நீடிப்புக்கான நடைமுறைகளைப் பூர்த்தி செய்யவும் குடிவரவுத் திணைக்களத்தின் அதிகாரிகளை நாட முடியும். இந்த இக்கட்டான சூழலில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் முன்னுரிமை அளித்துச் செயற்பட்டு வருவதாகவும், விமானச் சேவைகள் வழமைக்குத் திரும்பும் வரை இந்த விசா சலுகைகள் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.