ஹோர்முஸ் நீரிணை மூடல்: இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் என எச்சரிக்கை!

01 38

மத்திய கிழக்கின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திடீரென மூடப்பட்டால், அதனால் உலகிலேயே மிக மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்திற்கான கீல் நிறுவனம் (Kiel Institute for the World Economy) 2026 மார்ச் மாதம் வெளியிட்டுள்ள “The Cost of Closing the Strait of Hormuz” என்ற புதிய ஆய்வறிக்கையில் இந்த அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று இப்பிராந்தியத்தில் ஏற்பட்ட இராணுவ மோதல்களைத் தொடர்ந்து இந்த நீரிணை வழியான போக்குவரத்து முடங்கியுள்ள சூழலில் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நீரிணை முழுமையாக மூடப்படும் பட்சத்தில், இலங்கையில் கடுமையான உணவுப் பாதுகாப்பு நெருக்கடி ஏற்படும் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது. குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலைகள் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய ரீதியில் இரண்டாவது மிகப்பெரிய விலை உயர்வு எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எரிசக்தி தட்டுப்பாட்டுக்கு அப்பால், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் ஏற்படும் முடக்கம் ஒரு “தடை விளைவை” (Bottleneck effect) உருவாக்கி, அது நேரடியாக விவசாய உற்பத்தியைப் பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் விவசாயக் கட்டமைப்பு இந்த நெருக்கடியால் அதிக ஆபத்தை எதிர்கொள்ள மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, இலங்கை தனது எரிசக்தி மற்றும் உரத் தேவைகளுக்குப் பெருமளவில் இறக்குமதியையே சார்ந்துள்ளது. இரண்டாவதாக, ஒரு பெரிய விவசாயத் துறையைக் கொண்டிருந்த போதிலும், இறக்குமதித் தடைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய உடனடி மாற்றுத் திட்டங்கள் இலங்கையிடம் குறைவாகவே உள்ளன. மூன்றாவதாக, நைட்ரஜன் அடிப்படையிலான உரங்களுக்காக இலங்கை பெரும்பாலும் வளைகுடா நாடுகளையே நம்பியிருக்கிறது.

குறிப்பாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இத்தகைய விநியோகத் தடைகள் ஏற்படுவது மிகவும் அபாயகரமானது. இது பயிர்ச்செய்கை காலமாகும் என்பதால், உரத் தட்டுப்பாடு காரணமாக அறுவடை கணிசமாகக் குறைவடைவதுடன், பயிர்ச்செய்கை முற்றாகப் பொய்த்துப் போகும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சவால்களை எதிர்கொள்ள, இலங்கை போன்ற நாடுகள் எரிசக்தி பாதுகாப்பிற்கு இணையாக உரப் பாதுகாப்பிற்கும் (Fertilizer security) முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், உரங்களுக்கான மூலோபாய இருப்புக்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் கீல் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

Exit mobile version