2026 ஆம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்காக, தகுதியுள்ள தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்களைத் தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது. இது தொடர்பான விரிவான வழிகாட்டல்களை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
2026 ஜனவரி 28 முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி பிற்பகல் 03.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பப் படிவங்களைத் தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளம், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அல்லது தேர்தல் செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பத்துடன் 2472/21 ஆம் இலக்க வர்த்தமானியின் படி தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் (செயலாளரின் கையொப்பத்துடன்), அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களின் பட்டியலில் இருந்து (வர்த்தமானி 2471/24) கட்சிக்குத் தேவையான சின்னத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும், கட்சியின் யாப்பு, உத்தியோகத்தர் பட்டியல் மற்றும் கடந்த 4 ஆண்டுகளுக்கான பெண் உத்தியோகத்தர்களின் விபரங்கள் உள்ளிட்ட ஆவணங்களைத் தனித்தனி கோப்புகளாகச் சமர்ப்பிக்க வேண்டும்
கடந்த 4 ஆண்டுகளுக்கான கணக்காய்வு அறிக்கைகள். கட்சி கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகச் செயற்பட்டதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் தற்போதைய கொள்கைப் பிரகடனம்.
விண்ணப்பிக்கும் முறை:
முகவரி: தலைவர், தேர்தல் ஆணைக்குழு, சரண மாவத்தை, இராஜகிரிய.
அனுப்பும் முறை: பதிவுத் தபால் மூலம் அல்லது நேரடியாக வந்து கையளிக்கலாம்.
கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கான விண்ணப்பம் – 2026 என்று குறிப்பிடப்பட வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது எனத் தேர்தல் ஆணைக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

