அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தான் சேர்க்கப்படாதது குறித்து, இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு முன்னதாக வதோதராவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது.
நான் இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறேன். என் விதியில் என்ன எழுதப்பட்டுள்ளதோ, அதை என்னிடமிருந்து யாரும் பறிக்க முடியாது. இதுவே எனது நம்பிக்கை.
டி20 உலகக் கோப்பை அணியில் தனது பெயர் இல்லாதது குறித்துப் பேசிய அவர், தேர்வுக்குழுவின் முடிவை மதிப்பதாகவும், உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
ஒரு விளையாட்டு வீரர் எப்போதும் நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அது வாழ்க்கையை எளிமையாகவும், அமைதியாகவும் மாற்றுவதுடன் வெற்றிக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
அணியின் கேப்டனாக இருந்துவிட்டு, காயம் காரணமாகப் போட்டிகளில் விளையாட முடியாமல் வெளியே அமர்ந்திருப்பது மிகவும் கடினமான மற்றும் வெறுப்பான விஷயம் என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய கில், ஐசிசி தொடர்களை வெல்வதற்கு விடாமுயற்சியும் மன உறுதியும் அவசியம் என்றார். மேலும், டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராவதற்குப் போதிய நேரமில்லை என்பது குறித்து ஆலோசித்துள்ளதாகவும், உலகெங்கிலும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறக் கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Shubman Gill Opens Up After T20 World Cup Snub; Respects Selectors’ Decision.

