18 ஆண்டுகால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 2025 ஐபிஎல் கிண்ணத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் புதிய காணொளி ஒன்றில், ஆர்சிபி அணியின் வெற்றி குறித்து தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.
நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அங்கமாக இருக்கும் வரை, வேறு எந்த அணியாவது கிண்ணத்தை வெல்வதை என்னால் கற்பனை செய்ய முடியாது. இது ஒரு போட்டியாளராக எனக்குள் இருக்கும் இயல்பான குணம் எனத் தனது வழக்கமான பாணியில் குறிப்பிட்டார்.
இருப்பினும், ஆர்சிபியின் இந்த வெற்றி நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. தொடர் முழுவதும் அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் எனப் பாராட்டியுள்ளார்.
ஆர்சிபி ரசிகர்கள் மிகவும் அற்புதமானவர்கள். அணி தோற்றாலும் கூட அவர்கள் மைதானத்திற்கு வந்து உற்சாகப்படுத்துவதை நிறுத்தவே மாட்டார்கள் என ரசிகர்களுக்கும் புகழாரம் சூட்டினார்.
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியைத் தோற்கடித்து தனது கன்னி வெற்றியைப் (Maiden Title) பதிவு செய்தது. விராட் கோலி பல ஆண்டுகளாகக் கண்டு வந்த கனவு இதன் மூலம் நனவானது.
ஐந்து முறை கிண்ணத்தை வென்ற வெற்றிகரமான கப்டனான தோனி, 2026 ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத் தொடர்ந்து விளையாடவுள்ளார் என்ற தகவல் சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

