உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடிய அர்ஜென்டினா – கடல் அலையென திரண்ட 40 லட்சம் ரசிகர்கள்

கத்தாரில் நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது.

தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.

1810279 3

இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் தாயகம் திரும்பினார்.அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேசிய வரலாற்று நினைவு சின்ன வளாகத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வெற்றியை கொண்டாடினர். மேலே இருந்து பார்க்கும் போது இது மக்கள் கூட்டம் தானா என சந்தேகம் படும் அளவில் இருந்தது.

கிட்டத்தட்ட 40 லட்சம் மக்கள் வரவேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அது சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#sports

Exit mobile version