புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

world 55

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட போக்குவரத்துத் திட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை பண்டிகைக் காலத்தில் சுமார் 15 இலட்சம் பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பயணிகளின் வசதி கருதி பாரியளவிலான மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) இம்முறை 1,500 மேலதிக பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1,250 பேருந்துகள் அதிகமாகும். அத்துடன், பயணிகளின் அவசரத் தேவைகளுக்காக மேலும் 50 பேருந்துகள் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகச் சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) கீழ் சுமார் 800 மேலதிக தனியார் பேருந்துகள் நாளாந்தம் இயக்கப்படவுள்ளன. இந்தப் பேருந்துகள் பிரதானமாகக் கடுவலை, கடவத்தை, மாகும்புர மற்றும் பெஸ்டியன் மாவத்தை ஆகிய பிரதான பஸ் நிலையங்களிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்குப் புறப்படவுள்ளன.

பயணிகள் நெரிசலின்றித் தங்களது பயணங்களை மேற்கொள்ளும் வகையில் பஸ் நிலையங்களில் விசேட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. புத்தாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் கொழும்பு திரும்புவோருக்கான விசேட போக்குவரத்துத் திட்டங்களும் அடுத்த வாரத்திலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version