வியட்நாம் குடியரசின் ஜனாதிபதியும் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (மே 07) மதியம் இலங்கை வந்தடைந்தார். சுமார் 200 பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவுடன் வருகை தந்துள்ள அவரை வரவேற்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரையான பாதைகளிலும், கொழும்பு நகரின் முக்கிய வீதிகளிலும் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வாகன அணிவகுப்பு செல்லும் நேரங்களில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, கிராண்ட்பாஸ், பேஸ்லைன் வீதி, பொரெல்லா சந்திப்பு, ஹோர்டன் பிளேஸ் மற்றும் காலி வீதி உள்ளிட்ட பிரதான வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும். குறிப்பாக, விஐபி வாகன அணிவகுப்பு ஆரம்பமாவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இந்த வழித்தடங்களில் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய வாகனங்கள் அணிவகுப்பு பயணிக்கும் தருணத்தில் தற்காலிகமாக நிறுத்தப்படும் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாளை (மே 08) வியட்நாம் ஜனாதிபதி ஜனாதிபதி செயலகம், கொழும்பு பொது நூலகம் மற்றும் பாராளுமன்றம் ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளார். இதன்போது என்.எஸ்.ஏ (NSA) ரவுண்டானா, காலி முகத்திடல் வீதி மற்றும் வங்கி மாவத்தை ஊடாகச் செல்லும் போக்குவரத்துக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் தடைப்படும். நாளை காலை 11.05 மணியளவில் ஜனாதிபதி டோ லாம் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளமை இந்த விஜயத்தின் முக்கிய நிகழ்வாகும். இதனையொட்டி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் அதனைச் சூழவுள்ள வீதிகளிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விஜயத்தின் போது தகவல் தொழில்நுட்பம், கலாச்சாரம், விவசாயம் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான 55 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், பொலிஸாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நாளை மாலை தனது விஜயத்தை முடித்துக்கொண்டு அவர் நாடு திரும்பவுள்ளார்.

