அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் மன ஆரோக்கியம் மற்றும் நலன்புரி ஓம்புகையை மேம்படுத்தும் நோக்கில், வளவாளர்களைப் பயிற்றுவிக்கும் விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (22) ஆரம்பமாகவுள்ளது.
இந்த விசேட பயிற்சியின் போது சிரேஷ்ட உளவியலாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் குழுவினர் கலந்துகொண்டு, அனர்த்தத்தின் பின் ஏற்படும் மன அழுத்தத்தைக் கையாள்வது குறித்துப் பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.
இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கிராமிய அபிவிருத்தி அமைச்சு, சமூக பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகிய ஐந்து அமைச்சுகள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளன.
குறிப்பாக அனர்த்தங்களினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களை இலக்கு வைத்து இந்த உள சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அனர்த்தங்களின் பின்னர் மக்கள் எதிர்கொள்ளும் அதிர்ச்சி மற்றும் மன ரீதியான சவால்களைச் சரியாகக் கையாள்வதற்கும், அவர்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாகக் கட்டியெழுப்புவதற்கும் இந்தத் திட்டம் ஒரு பலமான அடித்தளமாக அமையும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

