வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (டிசம்பர் 1) வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய ஆலோசனைகள்:
தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கான அடிப்படைச் சுகாதார வசதிகளை உறுதி செய்தல் மற்றும் மருத்துவ சேவைகளை ஒருங்கிணைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பும் சூழலில், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இடர் நிலைமையின் போது, மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஏற்பட்ட பௌதீகப் பாதிப்புகள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
குறிப்பாக, சில மருத்துவமனைகளுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் இதுவரை முழுமையாகச் சீர்செய்யப்படாமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதனைத் துரிதப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
பேரழிவின் தாக்கத்தைத் தணித்து, விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான சுகாதாரத் திட்டங்களை வகுப்பதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாக இருந்தது.

