கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைகளை முன்னிட்டு, கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்துச் சேவைகள் இன்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மேற்பார்வையில் இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) மற்றும் தனியார் பேருந்துகள் இணைந்து இந்தச் சேவைகளை வழங்குகின்றன. கடவத்தை, கடுவலை, மாகும்புர மற்றும் கொழும்பு பெஸ்டியன் மாவத்தை ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு நீண்டதூரச் சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
காலி மற்றும் மாத்தறை நோக்கிச் செல்லும் பயணிகளுக்காக 70 வழித்தடங்களில் பேருந்து சேவைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விடுமுறை முடிந்து டிசம்பர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பு திரும்புபவர்களுக்காகவும் மேலதிக பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டிருந்த தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு, கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரையான சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கான தொடருந்து சேவைகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மருதானை முதல் மாத்தறை வரை இன்று மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட தொடருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் 2026 ஜனவரி 5 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும். போக்குவரத்து தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற துரித இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்த முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

