மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், சோமாவதி புனித பூமிக்குச் செல்லும் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் இரண்டாம் நாளாகவும் இன்றும் (19) ஸ்தம்பிதமடைந்துள்ளன.
நேற்று (18) நண்பகல் முதல் பொலிஸாரால் மூடப்பட்ட இந்த வீதி, இன்று மேலும் மோசமடைந்துள்ளது.
சோமாவதி – சுங்காவில பிரதான வீதியின் திக்கல (Thikkala) பகுதியில் தற்போது சுமார் 3 அடிக்கும் அதிக உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்து வருவதாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வீதியூடான அனைத்து வகையான போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சோமாவதி புனித பூமியை தரிசிக்கத் திட்டமிட்டுள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், தற்போதைய அபாய நிலையைக் கருத்திற்கொண்டு மேலதிக அறிவிப்பு வரும் வரை இப்பயணத்தைத் தவிர்க்குமாறு அல்லது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்ச்சியாக நிலவி வரும் மழையினால் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், அப்பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

