வெப்பமான வானிலைக்குப் பெயர் பெற்ற சவூதி அரேபியாவில், தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள மலைப்பகுதிகள் பனிப் போர்வைய போர்த்தியது போலக் காட்சியளிக்கின்றன.
தபூக் (Tabuk) மாகாணத்தில் உள்ள ஜபல் அல்-லாவ்ஸ் (Jabal al-Lawz) மற்றும் ட்ராஜெனா (Trojena) மலைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை (17) அன்று ஜபல் அல்-லாவ்ஸ் மலையில் வெப்பநிலை மைனஸ் 4 டிகிரி செல்ஷியஸ் (-4°C) வரை சரிந்துள்ளது. சைபீரியாவிலிருந்து வீசும் கடும் குளிர் அலை, மத்திய தரைக்கடல் ஈரப்பதத்துடன் கலந்ததே இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலைவன மணல் குன்றுகள் மீது பனி படர்ந்துள்ள அரிய காட்சியைக் காணச் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் திரண்டு வருகின்றனர். அதேவேளை, பலத்த காற்று மற்றும் பனிமூட்டம் காரணமாகச் சாலைகளில் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வழுக்கும் சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், இது ஒரு இயற்கை நிகழ்வுதான் என்பதைச் சவூதி வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.