இலங்கைப் போக்குவரத்துச் சபையின் (SLTB) வரலாற்றில் முதல் முறையாக, 19 பெண் நடத்துனர்கள் உத்தியோகபூர்வமாகத் தனது நிரந்தரப் பணியாளர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர். இது இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையில் பாலின சமத்துவத்தை நோக்கிய ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும்.
மாகும்புர மல்டிமாடல் போக்குவரத்து மையத்தில் (Makumbura Multimodal Transport Center) நேற்று (06) நடைபெற்ற விசேட விழாவில் இதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மாலி குணசிங்க மற்றும் SLTB தலைவர் சஜீவ கனகரட்ண ஆகியோர் கலந்துகொண்டு புதிய பணியாளர்களை வரவேற்றனர்.
நியமிக்கப்பட்ட இந்த 19 பெண்களும், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் முதல் அதிகாரப்பூர்வ பெண் நடத்துனர்களாக வரலாற்றில் தடம் பதித்துள்ளனர் எனப் பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவியேற்றது முதல், போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், பாலினச் சமத்துவத்தைப் பேணவும் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகின்றார்.
பொதுப் போக்குவரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் (Harassment) மற்றும் இதர அசௌகரியங்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இத்தகைய நியமனங்கள் அமைவதோடு, இது பெண் பயணிகளுக்கு மேலதிக பாதுகாப்பையும் நம்பிக்கையையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.