நாட்டில் தற்போது நிலவி வரும் மின்சார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றத்தின் பின்னணியில் பாரிய ஊழல்கள் மறைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவத்தால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை அப்பாவி மக்கள் மீது சுமத்த இடமளிக்க முடியாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவாக இருந்த போதிலும், இலங்கையில் எரிபொருள் கையிருப்பு வருவதற்கு முன்னரே விலையை உயர்த்தியதன் மூலம் மக்கள் சுரண்டப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
யுத்தச் சூழலைக் காரணம் காட்டி முறையாக விலைமனு கோரப்படாததால், தனியார் நிறுவனங்களை விட ஒரு லீட்டர் எரிபொருளுக்கு 80 ரூபாய் வரை மேலதிகமாகச் செலுத்தி அரசாங்கம் எரிபொருளை வாங்கியுள்ளதாகச் சானக்க குற்றம் சுமத்தினார். இதன் காரணமாக நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் லாபம் முறையற்ற வகையில் கையாளப்பட்டுள்ளது. மேலும், நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் காரணமாக 150 மெகாவாட் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், இதனை ஈடுகட்ட வேண்டுமானால் இலங்கையிலுள்ள சுமார் 60 லட்சம் வீடுகளிலும் தலா 3 மின்விளக்குகளை ஒரு நாள் முழுவதும் அணைத்து வைக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிர்வாகத் திறமையின்மை மற்றும் ஊழல்களினால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அத்தகைய நடவடிக்கையைத் தாம் கடுமையாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டார். ஊழலில் ஈடுபட்டவர்களிடமிருந்தே அந்தப் பணத்தை அரசாங்கம் அறவிட வேண்டுமே தவிர, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்களைத் துன்புறுத்தக் கூடாது என அவர் வலியுறுத்தினார். மீறி மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டால், அதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் பிரம்மாண்டமான போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.