வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து சுமார் 1,945 இலட்சம் ரூபாவிற்கும் (194.5 மில்லியன்) அதிக நிதியை மீளப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. சட்டவிரோத வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மற்றும் மோசடியாளர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளின் மூலமே இந்தத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதியை விரைவில் பகிர்ந்தளிக்கப் பணியகம் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் மட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாகப் பணியகத்திற்கு 2,081 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம் 244 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் நடத்திய 19 சுற்றிவளைப்புகளில் 88 மோசடியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிர்ச்சியூட்டும் தகவலாக, அரசாங்கத்தின் முறையான அனுமதிப்பத்திரம் பெற்ற மூன்று வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களைச் சேர்ந்தவர்களும் இந்தக் கைது பட்டியலில் அடங்குகின்றனர்.
தற்போது உலகளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அதிக வருமானம் ஈட்டும் நோக்கில் இஸ்ரேல், தென்கொரியா, ஜப்பான், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல முற்படும் இலங்கையர்களை இலக்கு வைத்து சமூக ஊடகங்கள் வாயிலாகப் பாரிய பண மோசடிகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, போலியான வேலை வாய்ப்பு விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து, முன்பின் தெரியாத நபர்களின் வங்கி கணக்குகளுக்குப் பணத்தை வைப்பிலிடும் போக்கு அதிகரித்துள்ளதாகப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் எவரேனும் வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் முன்னர், குறித்த முகவர் நிலையம் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது 1989 என்ற அவசர இலக்கம் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பணியகத்தின் நேரடி அனுமதி இன்றி எவருக்கும் கடவுச்சீட்டு உள்ளிட்ட தனிப்பட்ட ஆவணங்களையோ அல்லது பணத்தையோ வழங்க வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

