2026ஆம் ஆண்டிற்குள் ஜப்பானிய மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்த 5000 இலங்கையர்களைக் கொண்ட ஒரு குழாத்தை உருவாக்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜப்பானிய வேலைவாய்ப்புகளுக்காக இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்துள்ள நிறுவனங்களின் பிரதானிகள் சிலர் நேற்று (நவம்பர் 19) SLBFE-இன் உயர் முகாமைத்துவத்தை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து அதிகளவான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதும், ஜப்பானிய வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதும் இந்த ஜப்பானிய பிரதானிகள் குழுவின் விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஜப்பானிய நிறுவனப் பிரதிநிதிகளிடம் பேசிய கோசல விக்ரமசிங்க, பணியகம் ஊடாகப் புதிய வேலைத்திட்டமொன்றை உருவாக்கி, பின்வரும் இலக்குகளை அடைய எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்: 2026ஆம் ஆண்டில் ஜப்பானிய மொழிப் பயிற்சியை நிறைவு செய்த 5000 இலங்கையர்களை உருவாக்குதல்.
IM Japan நிறுவனம் ஊடாக சுமார் 1000 பேரை ஜப்பானுக்கு அனுப்புதல்.
மேலும், அதிகளவானோருக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதால், அதற்காக மாவட்ட மட்டத்தில் பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, மொழி மற்றும் திறன் மிக்க இலங்கையர்களை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

