இலங்கையில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் காணப்பட்ட எழுச்சியுடன் ஒப்பிடுகையில், பிப்ரவரி மாதத்தில் வாகனப் பதிவுகள் சற்று குறைந்துள்ளதாக JB Securities நிறுவனத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதத்தில் 55,365 அலகுகளாக இருந்த மொத்த வாகனப் பதிவுகள், பிப்ரவரியில் 51,682 அலகுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மோட்டார் கார்கள், எஸ்யூவி (SUV) மற்றும் வேன் போன்ற பல பயணிகள் வாகனப் பிரிவுகளில் விற்பனை மந்தமடைந்துள்ளதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும், சந்தையில் இரண்டு சக்கர வாகனங்களின் ஆதிக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 4,163 மோட்டார் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் ஜப்பானிய வாகனங்களே (3,504 அலகுகள்) தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் வாகனங்களுக்கே நுகர்வோர் மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுகிறது.
மின்சார வாகனங்களின் பங்களிப்பு குறித்துப் பார்க்கையில், பிப்ரவரியில் 3,332 மின்சார வாகனங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,845 அலகுகள் இரண்டு சக்கர வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மூன்று சக்கர வாகனப் பதிவுகள் 4,060 ஆக உயர்ந்துள்ளதோடு, அதில் பஜாஜ் நிறுவனம் சுமார் 81.8 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது. புதிய எலக்ட்ரிக் கார் பிரிவில், 5 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான விலையுடைய BAW E7 மாடல் 193 அலகுகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.
சொகுசு வாகனப் பிரிவில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் முன்னிலை வகிக்கின்றன. கூடுதலாக, போர்ஷே, ரோல்ஸ்-ராய்ஸ் மற்றும் பென்ட்லி போன்ற அதி சொகுசு ரக வாகனங்களும் பிப்ரவரி மாதத்தில் பதிவாகியுள்ளன. உள்ளூரில் அசெம்பிள் செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை 7,531 ஆகப் பதிவாகியுள்ளது. சந்தை இன்னும் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், இந்தத் தரவுகள் முழுமையான நுகர்வோர் தேவையைப் பிரதிபலிக்கவில்லை என்றும் JB Securities நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் முர்தசா ஜாபர்ஜி தெரிவித்துள்ளார்.

