இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையே புதிய கூட்டணிகள் மற்றும் மீள்-இணைவுகள் குறித்த அதிரடி நகர்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்த தீர்க்கமான பேச்சுவார்த்தையொன்று நேற்று (24.01.2026) கொழும்பு தாஜ் சமுத்ரா (Taj Samudra) ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் சவால்களை எதிர்கொள்ள இரு கட்சிகளும் ஒரு பொதுவான இணக்கப்பாட்டின் கீழ் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து (SLPP) விலகியிருந்த குழுவினர் மீண்டும் அதே கட்சியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை ஆதரித்த முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண, கடந்த ஜனவரி 22 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மீண்டும் மொட்டுக் கட்சியில் இணைந்துகொண்டார்.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் பிரதியமைச்சராகப் பதவி வகித்த முக்கிய ஒரு பிரமுகரும் எதிர்வரும் வாரங்களில் மீண்டும் கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சிதறிப்போயிருந்த பழைய கூட்டணிகள், வரவிருக்கும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களைக் கருத்தில் கொண்டு மீண்டும் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது தென்னிலங்கை அரசியலில் ஒரு புதிய சக்தியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.