கொழும்பு மாநகரப் பகுதியில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களில் பெரும்பாலானோர் ‘ஐஸ்’ (Crystal Meth) மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆரச்சி இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்களை வெளியிட்டார். போக்குவரத்து விதிகளுக்கு முரணாக வாகனம் செலுத்துபவர்களில் 43 சதவீதமானவர்கள் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள் என அடையாளர் காணப்பட்டுள்ளனர்.
ஏறத்தாழ 25 சதவீதமான வாகன ஓட்டுநர்கள் கஞ்சா போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் வீதி விபத்துக்களுக்கு இந்த போதைப்பொருள் பாவனையே பிரதான காரணியாக அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, கொழும்பு போன்ற நெரிசலான பகுதிகளில் இவ்வாறான ஓட்டுநர்களால் பொதுமக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனைக் கட்டுப்படுத்த வீதிகளில் எழுமாறான போதைப்பொருள் சோதனைகளை (Random Drug Testing) அதிகரிப்பதுடன், கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

