விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா (NASA) அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்ணப்பிக்கப்படும் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறிய ரக SD கார்டில் (SD Card) டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும். இந்தத் தரவு அட்டையானது (SD Card), நிலவை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஓரியன் (Orion) விண்கலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு விண்வெளிக்கு ஏவப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு இந்த அனுபவத்தை மறக்க முடியாததாக மாற்ற நாசா சில சுவாரஸ்யமான வசதிகளை வழங்கியுள்ளது.
பதிவு செய்பவர்களுக்கு நிலவுப் பயணத்திற்கான பிரத்தியேகமான “போர்டிங் பாஸ்” டிஜிட்டல் முறையில் வழங்கப்படும். குழந்தைகள், அன்புக்குரியவர்கள் மட்டுமன்றி தங்களது செல்லப் பிராணிகளின் (Pets) பெயர்களுக்காகவும் இந்த போர்டிங் பாஸ்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நாசா தனது அதிகாரப்பூர்வ ‘X’ (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தின் ஊடாகப் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நிலவுக்குத் தங்கள் பெயரை அனுப்ப விரும்புவோர் நாசாவின் உத்தியோகபூர்வ இணையதள முகவரியான https://go.nasa.gov/49NQ4mf ஊடாகத் தங்கள் விபரங்களை உடனடியாகப் பதிவு செய்யலாம்.

