பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய சட்டத்திருத்தம் மூலம் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்:
இணைப் பேராசிரியர்கள் மற்றும் தரம் 1 சிரேஷ்ட விரிவுரையாளர்களிடமிருந்து துறைத் தலைவரைத் தெரிவு செய்யத் துறைச் சபைக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
ஒரு துறைத் தலைவரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே, அவரைப் பதவியிலிருந்து அகற்றும் அதிகாரத்தைப் பல்கலைக்கழகப் பேரவைக்கு (Council) வழங்கும் வகையில் சட்டப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பதவிக்காலக் கட்டுப்பாடு: துறைத் தலைவர் ஒருவரின் பதவிக்காலம் தொடர்பில் புதிய மட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவும் இந்தச் சட்டமூலம் வழிவகை செய்கிறது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு, மேற்பார்வைக் குழு இந்தச் சட்டமூலத்திற்குத் தனது அங்கீகாரத்தை வழங்கியது.
ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதில் நிலவும் இழுபறிகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.
2019-இல் 1,918 வெற்றிடங்களுக்காக நடத்தப்பட்ட பரீட்சை மூலம், 2022-இல் 155 பேரும், 2023-இல் நீதிமன்ற உத்தரவுப்படி 4,672 பேரும் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர்.
எஞ்சியிருப்போர்: 2019 பிரிவில் தெரிவாகியும் இன்னும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படாமல் எஞ்சியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. ஏன் வருடாந்தம் போட்டிப் பரீட்சைகள் நடத்தப்படவில்லை? ஒரே பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு பல ஆண்டுகள் ஆட்சேர்ப்பு செய்வதால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கப் புதிய பரீட்சையை ஏன் நடத்தவில்லை? எனக் குழு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, (கலாநிதி) வி.எஸ். இராதாகிருஷ்ணன், ரவிகரன் உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.