தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் (Organized Crime Gangs) தொடர்புகளைப் பேணி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, காவல்துறை விசேட புலனாய்வுப் பிரிவின் (Police Special Investigation Unit) அதிகாரங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
காவல்துறை விசேட புலனாய்வுப் பிரிவு, காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் நடத்தை மற்றும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
தற்போதுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்தப் பிரிவுக்கு மேலதிக அதிகாரிகளை நியமித்து, புலனாய்வு அமைப்புகளுடன் நேரடித் தொடர்புகொள்ளத் தேவையான அனுமதியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் உறுப்பினர்களின் தொலைபேசித் தொடர்புகளைக் கண்காணித்ததில், பல காவல்துறை அதிகாரிகள் அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. குறித்த அதிகாரிகள் மீதான ஆரம்ப விசாரணைகளை இந்தப் பிரிவு நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.