பாடசாலைகள் ஆரம்பம்!- வெளியானது அறிவிப்பு!!
எதிர்வரும் ஒக்ரோபர் மாத நடுப்பகுதியில் கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான செயலாளர் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது முன்னுரிமை கொடுக்க வேண்டிய வகுப்புகள் தொடர்பில் தற்போது திட்டமிடல்களை தயாரித்துள்ளோம்.
முதற்கட்டமாக, உயர்தரம், சாதாரணதரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பிரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு முகங்கொடுக்கின்ற மாணவர்களுக்கு பாடசாலையை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். குறித்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்ரோபர் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் இந்த தீர்மானத்தை உறுதியாக கூற முடியாது.
பாடசாலையை மிக விரைவில் ஆரம்பிக்குமாறு எமக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை பின்பற்றி மிக விரைவில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திட்டங்களை தயாரித்து வருகிறோம்.
எதிர்வரும் காலங்களில் சரியான திட்டமிடலுடன் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம், தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்கும்போது குறைந்தளவு மாணவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம், – என்றார்.