பாடசாலை ஒன்றின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருளைப் பொதி செய்த குற்றச்சாட்டில், அந்தப் பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் உட்பட மூவர் செவனகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 28 வயதான விளையாட்டு ஆசிரியர், தனமல்வில, உவகுடாஓயாவில் உள்ள சமகிபுர பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். இவர் செவனகல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றி வருகின்றார்.
ஆசிரியருடன் கைது செய்யப்பட்ட மற்ற இருவரில் ஒருவர், நீண்டகாலமாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் பாடசாலையின் உத்தியோகபூர்வ இல்லத்தை மறைவிடமாகப் பயன்படுத்திப் போதைப்பொருள் பொதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறித்த ஆசிரியர், இந்த போதைப்பொருட்களைப் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்தாரா அல்லது மாணவர்களைக் கடத்தலுக்குப் பயன்படுத்தினாரா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கல்விச் சமூகத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்துச் செவனகல பொலிஸார் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

