சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சவுதி அரேபிய பிரஜை ஒருவர், விமானப் பணிப்பெண்கள் இருவரைத் தாக்கிய குற்றத்திற்காக ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடையவர் ஆவார்.
இவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து மலேசியாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
விமானம் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, பயணிகள் அனைவரும் இருக்கைப்பட்டை அணிந்து இருக்கையில் அமர வேண்டிய விதியை அவர் மீறி, கழிவறைக்குச் செல்ல முயன்றார்.
அவரைப் பணிப்பெண்கள் தடுத்தபோது இந்தத் தாக்குதல் இடம்பெற்றது. சம்பவம் குறித்துப் பணிப்பெண்கள் விமானிக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து, விமானம் தரையிறங்கியதும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.