image 1200x630 7
செய்திகள்அரசியல்இலங்கை

சர்வதேச குற்றவியல் விசாரணையை சரத் பொன்சேகா வலியுறுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Share

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்கத் தயாரானால், சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்த வேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தில் ‘வெள்ளைக் கொடி விவகாரம்’ தொடர்பில் சாட்சியம் வழங்கத் தயார் என சரத் பொன்சேகா அண்மையில் கூறி வருகின்றமை குறித்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
“இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் விசாரணை நடைபெற்றால் இனப்படுகொலை நிரூபிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கும்போது, அதனைக் குழப்பும் விதமாக அரசுடன் இணைந்து செயற்படும் விதமாக சரத் பொன்சேகாவின் கருத்துக்களும் இருந்து வருகின்றன.

இறுதி யுத்தத்தின்போது இராணுவம் தொடர்ச்சியாக மக்களை அழிக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு கண்காணிக்கப்பட்ட பொறிமுறையை ஏற்படுத்துவதற்காக என்னுடன் தொடர்புகளை மேற்கொண்டார்கள்.

நான் இணக்கப்பாட்டை ஏற்படுத்துகின்ற முயற்சிகளை மேற்கொண்டேன். குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி பிற்பகல் முதல் இரவு 8 மணி வரை இரு பக்கத் தொடர்புகளை மேற்கொண்டு இணக்கப்பாடு எட்டப்பட்டது. அரச தரப்பில் பஸில் ராஜபக்‌சவும் நானும், ஆயர்களான இராயப்பு யோசப் ஆண்டகை மற்றும் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, வன்னி கட்டுப்பாட்டுக்குச் சென்று அங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசன் வெளியில் வந்து மக்களைப் பாதுகாப்பாக வெளியில் கொண்டு வருவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

ஆனால், பேச்சு வெற்றியடைந்த போதும் இராணுவம் தொடர்ச்சியாக ஆட்லறித் தாக்குதலை மேற்கொண்டது. இதற்குக் காரணம் கேட்டபோது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச நாட்டில் இல்லை என்றும், அவர் நாடு திரும்பிய பின்னரே தேசிய பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. எனினும், அக்கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படாமல் தொடர்ச்சியாக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது.

இதனை ஏன் தொடர்ந்தும் செய்கிறீர்கள் எனக் கேட்டபோது, தேசிய பாதுகாப்புக் கூட்டம் கூடும் வரை தாக்குதலை நிறுத்த முடியாது எனக் கூறப்பட்டது. மேலும், வெள்ளைக் கொடியுடன்தான் வர முடியும் எனவும் கூறப்பட்டது.

இது சாத்தியப்பாடு இல்லாத விடயம் என்பதால் எனது இணக்கப்பாட்டை நான் முடிவுறுத்திக் கொண்டேன். சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் மூலம் மக்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுச் சரி வராத நிலையில்தான் என்னுடனான தொடர்பு மேற்கொள்ளப்பட்டது. எனவே வெள்ளைக் கொடி விவகாரம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கம் காணப்பட்ட போதும் தொடர்ச்சியான ஆட்லறித் தாக்குதல் மேற்கொள்ளப்படுவது மக்களை இல்லாது ஒழிப்பதற்கான சூழலைத்தான் அரசு செய்தது என்பதே நான் கூறும் விடயம். இது இனப்படுகொலையின் விவகாரமாகும்.

ஆனால், சரத் பொன்சேகா தற்போது கூறி வரும் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பில் நான் கூற முடியாது. வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களைக் கொலை செய்தார்கள் என்பது கடந்த காலங்களில் வெளிவந்த உண்மைகள் என்பது அனைவருக்கும் புரிந்த விடயம் ஆகும்.

சரத் பொன்சேகா தற்போது கூறும் விடயம், வெள்ளைக் கொடி தொடர்பாகத் தான் சாட்சி வழங்கத் தயார் என்பதே. உள்ளக விசாரணைக்குள் வெள்ளைக் கொடி விவகாரம் முடக்கப்படுவதற்கான அத்திவாரம் போடுகின்ற கருத்தாகவே இதனை நான் பார்க்கின்றேன். சரத் பொன்சேகாவும் சர்வதேச குற்றவியல் விசாரணைதான் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.”

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...