உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவராகக் கருதப்படும் சாரா ஜெஸ்மின் (புலத்தினி) இன்னும் உயிரோடு இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
சாரா ஜெஸ்மின் ஏற்கனவே சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் மரணமடைந்துவிட்டதாகக் கூறப்பட்ட தகவல்களில் உண்மையில்லை. அவர் உயிரோடு இருப்பதாகத் தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் இந்தியாவில் இருப்பதாகக் கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை. அவர் இந்தியாவில் மறைந்திருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாரா ஜெஸ்மின் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிய விசேட விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விசாரணைக்குத் தடையாக அமையும் என்பதால் அவர் இருக்கும் இடம் குறித்த மேலதிக விபரங்களை இப்போது வெளியிட முடியாது.
தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படுவது உறுதி என உறுதியளித்தார்.
விசாரணைகள் மிகவும் இரகசியமாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன, ஆனால் அவை பொதுவெளியில் பகிரப்பட்டால் குற்றவாளிகள் தப்பிவிட வாய்ப்புள்ளது என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

