எதிர்வரும் 20-20 உலகக்கிண்ணத் தொடரின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து தான் விலகப்போவதாக சனத் ஜயசூரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக பேட்டியின் போது சனத் ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரது ஒப்பந்தக் காலம் இன்னும் எஞ்சியிருக்கின்ற போதிலும், தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு தனக்கு விருப்பமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுக்கு எதிரான தொடரின் போது அவர் ‘இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக’ நியமிக்கப்பட்டார்.
அந்த ஆண்டின் இறுதியில் அவரது சிறப்பான செயல்பாட்டைத் தொடர்ந்து, அவர் முழுநேரத் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சனத் ஜயசூரியவின் தலைமையின் கீழ் இலங்கை அணி இதுவரை விளையாடியுள்ள போட்டிகளின் விபரம்:
மொத்தப் போட்டிகள்: 60 (அனைத்து வகையான போட்டிகளும் சேர்த்து)
வெற்றிகள்: 29
தோல்விகள்: 29
முடிவில்லை/சமநிலை: 02
சனத் ஜயசூரியவின் பயிற்சிக் காலத்தில் இலங்கை அணி பல முக்கியமான வெற்றிகளைப் பதிவு செய்துள்ள நிலையில், உலகக்கிண்ணத் தொடரின் பின்னர் அவர் விலகவுள்ளமை இரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.