தற்போதைய அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் மற்றும் பாடப்புத்தகங்களில் உள்ள பிழைகளை முன்வைத்து, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளன.
இன்று (07) பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தத் தீர்மானம் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்தானது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலாவது ஆளாக இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து ஏனைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டனர்.
எதிர்க்கட்சித் தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள், தரம் 6 ஆங்கிலப் பாடத்திட்டம் (Module) உட்படப் புதிய கல்விச் சீர்திருத்தங்களில் பாரிய மொழி மற்றும் கருத்துப் பிழைகள் காணப்படுகின்றமை., மாணவர்களின் மனநிலைக்கும் வயதுக்கும் பொருத்தமற்ற விடயங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை.இந்தப் பிழைகள் குறித்து உரிய தரப்பினர் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியமை இந்த தீர்மானத்திற்கான காரணங்கள்.
நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ளதால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தினால் அரசாங்கத்தின் நிலைப்புத்தன்மைக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படப்போவதில்லை. எனினும், கல்வித்துறையில் நிலவும் குறைபாடுகளைத் தேசிய அளவில் பேசுபொருளாக்கவே எதிர்க்கட்சிகள் இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

